சனி, 11 பிப்ரவரி, 2012
பிரளயகாலேஸ்வரர் கோயில்
பிரளயகாலேஸ்வரர் கோயில் ,பெண்ணாடம் .
தொழுதூரிலிருந்து திட்டக்குடி வழியாக விருத்தாசலம் செல்லும் சாலையில் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது பெண்ணாடம். ஆதிகாலத்தில் பெண்ணாகடம் என்றழைக்கப்பட்ட இவ்வூரில் அமைந்துள்ளதே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம்.
மூலவர் : பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்துநாதர்)
அம்மன்/தாயார் : அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 2வது தலமாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. .இக் கோயிலில் ஆஞ்சநேயருக்கும் சந்நிதி உண்டு.
கலிக்கம்பநாயனார், மெய்கண்டார், ஆகியோருக்கும் சந்நிதிகள் இங்கே இருக்கின்றன!
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோவில்!
திருப்பனந்தாள்-செஞ்சடையப்பர்
:கும்பகோணத்திலிருந்து சென்னை நெடுஞ்சாலையில் வடகிழக்கில் 18 கிலோ மீட்டரில் உள்ளது.
தலவிருட்சம்:பனைமரம் பனைமரத்தைத் தலவிருட்சமாக கொண்ட தலம்.எனவே இவ்வூருக்கு பனந்தாள் என்று பெயர்.தெய்வப்பனை இரண்டு இக்கோயிலின் பிரகாரத்தில் இருக்கிறது
கோவில் அமைப்பு:
மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப் பக்கத்தில் ஸ்தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்கிறது.
வழிபட்டோர் : பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர்,
சூரியர், சந்திரன், ஆதிசேஷன்,
நாககன்னிகை, தாடகை, குங்கிலியக்கலய நாயனார்
ஆகியோர்.
இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .மாமன்னன் ராஜேந்திர சோழன் தந்தை ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலை போன்று இங்கே கங்கை வெற்றியை குறிக்கும் முகமாக இக் கோவிலை கட்டி கங்கை கொண்டசொழபுரம் நகரை நிர்மாணித்தான்.
இறைவன் பிரகதீஸ்வரர் .இறைவி பெரியநாயகி. கொற்றவைக்கும் இங்கே தனி சன்னதி இருக்கிறது. தஞ்சையைப் போன்று பெரிய நந்தியும் இங்கு உண்டு.
இங்கு இருக்கும் கேணியின் மேல் பகுதி சிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது
கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் பிரம்மாண்டமுமே இந்தக் கோவிலின் சிறப்பம்சம். . தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும் தஞ்சை ஆண்மைக்கு அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் பெண்மைக்கு அடையாளம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயில், கல் காவியமாக, சிற்பக் களஞ்சியமாக, செப்புக்கலையின் கூடமாக, ஆன்மீக அமைதியின் இருப்பிடமாக, மாமன்னன் இராசேந்திரனின் போர்த்திறனையும், பேராற்றலையும் உலகோர்க்கு அறிவிக்கும் நிலைக்களனாகச் சோழ மண்ணில் திகழ்கிறது.
இருப்பிடம் :
கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் ரோட்டில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
அரியலூர்
பிராண நாதேஸ்வரர் ,திருமங்கலகுடி.
மங்களாம்பிகா உடனுறை ஸ்ரீ பிராண நாதேஸ்வரர் ஆலயம்!
சூரியனார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கோயில் இது.
குலோத்துங்க சோழனின் மந்திரி அரசுவரிப்பணத்தை இக்கோவில் திருப்பணிக்கு செலவழிக்க மன்னன கோபமுற்று மரண தண்டனை விதித்து விட்டான். மந்திரியின் மனைவி கோவிலில் சென்று இறைவனிடம் முறையிட இறைவன் பிணத்துக்கு உயிர் கொடுத்ததால் பிராணநாதர் என்று அழைக்க படுகிறார் .இறைவி மங்களநாயகி .
ஞாயிறு மதியம் பன்னிரண்டு மணிக்கு வெள்ளெருக்கு இலையில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட தயிர் சாதம் வழங்கபடுகிறது. இதை உண்டவர்களுக்கு தீராத நோய்கள் தீர்ந்துவிடுவதாக ஐதீகம்!
அம்பாளின் கைகளில் இருந்து தாலிக்கயிறு பெண்களுக்கு வழங்கப்படுகிறது, இதை பூஜித்து அணிந்து கொண்டால் அவள் என்றும் சுமங்கலியாகவே இருப்பாள் என்றும் ஒரு நம்பிக்கை இங்கு உண்டு.
சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இதுவும் இங்கே விசேஷமாகும்!
இங்கே ஞாயிற்று கிழமைகளில் செல்வது நன்மை பயக்கும்!
அணைக்கரை –கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் திருப்பனந்தாள் சென்று அங்கிருந்து ஆடுதுறை செல்லும் சாலையில் ஆறாவது கிலோமீட்டரில் இருக்கிறது திருமங்கல குடி!
சூரியனார் கோயில்
சூரியனார் கோயில்.
இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில் தான் சூரியனுக்கு கோவில் உள்ளது. ஓன்று வடக்கே ஒரிசாவிலும் மற்றொன்று தெற்கே கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது .
சூரியபகவான் சாயா,மற்றும் உஷா தேவியருடன் சிவசூரியன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சூரியனை சுற்றி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளனர்.
சூரியனார் கோயில் எனும் இத்தலம் நவகிரகங்களுக்கென தனித்தமைந்து இருப்பதால் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.
தை அமாவாசையிலிருந்து பத்து நாட்கள் சூரிய பகவானின் திருக்கல்யாண திருவிழாவாகும் .
*இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி அமைந்து உள்ளது.
*இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே சக்தி உள்ளதாக இருக்கிறது.
சூரியன் ,நவகிரகங்கள் உடன் விநாயகர்,விஸ்வநாதர், விசாலாட்சி ,ஆகிய சன்னதிகளும் உண்டு.
கும்பகோணம் –அணைக்கரை-ஆடுதுறை –மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை மற்றும் கும்பகோணம்.
வியாழன், 5 ஜனவரி, 2012
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோயில்
விருதாச்சலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயில் நூற்றியெட்டு வைணவதலங்களில் ஒன்றாகும்.
வராக மூர்த்தி பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீ பூவராகசுவாமி சந்நிதி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.
விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோயில் இது. கல்லினால் ஆன சங்கிலி பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது.இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள்.
தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர். நான் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இக்கோவிலுக்கு சென்றுவந்தேன்.
செவ்வாய், 3 ஜனவரி, 2012
பழமலை நாதர் என்கிற விருத்தகிரீஸ்வரர் !
சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.தற்போது விருத்தாசலம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் பழமலை நாதர் .இறைவி பெரியநாயகி.
இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு காதில் ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை)என்பது இங்கு ஐதீகம்.
ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும்.காசியை விட வீசம் பெரிது என்பார்கள்!
.
இத்தல விநாயகர் , பாதாள விநாயகர் மிக்க சிறப்புவாய்ந்தவர்.
சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் இங்கு உள்ளது.
"விருத்தாசலம் " விழுப்புரம் - திருச்சி இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில்நிலையமாகும். நிலையத்திலிருந்து 2-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
எனது ஆங்கில புத்தாண்டு இவ்வாலயத்திலிருந்தே தொடங்கியது!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)