சனி, 18 ஜனவரி, 2014

அமிர்தகடேஸ்வரர் ஆலயம் -மேல கடம்பூர்!




நண்பர் Sasi Dharan ஒரு பதிவு போட்டிருந்தார்.மேல கடம்பூர் அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் பற்றிய பதிவு அது.போதாதற்கு பொன்னியின் செல்வன் சம்பந்தப்பட்ட இடம் என்று வேறு சொல்லி ஏன் ஆவலை மேலும் தூண்டிவிட்டார்!
இரவு முழுதும் வந்தியதேவனும் ,ஆதித்த கரிகாலரும்,நந்தினியும், பழுவேட்டரயர்களும் ,என்னை தூங்க விடாமல் துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள்,
இன்று காலை விடிந்தும் விடியாமலும் கடுங்குளிரில் பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து போனேன் அந்த கடம்பூர் மாளிகைக்கு !
கண்டு ரசித்தேன் அந்த கலை பொக்கிஷத்தை!
நன்றிகள் சோழனுக்கு நல்ல கலைப்டைப்பை நிறுவியதற்கு !இன்னொரு நன்றி அடையாளம் காட்டிய நண்பர் சசி தரனுக்கு!
சசியின் பதிவிற்கான இணைப்பு -https://www.facebook.com/SasidharanGS
 (10 photos)







இதோ நண்பர் சசிதரனின் வரிகளிலேயே இந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்வோம்!
மேலக்கடம்பூர் கோயிலை வந்தடைந்தோம். மேலக்கடம்பூர் எங்கேயோ கேள்வி பட்ட ஊர் போன்று தோன்றுகின்றதா? ஒரு க்ளு, வீரநாராயண ஏரி, கடம்பூர் மாளிகை, ஆதித்த கரிகாலன் கொலை…. ஞாபகம் வந்திவிட்டதா, அதே வரலாற்று சிறப்பு வாய்ந்த கடம்பூர் தான், அந்த ஊரில் இருக்கும் "அமிர்தகடேஸ்வரர்" கோயிலுக்கு தான் வந்திருக்கிறோம். உள்ளே நுழையும் போது சாதாரண ஒரு கோயிலாக தான் இருந்தது.கோயிலுக்குள் நுழைந்து கருவறையை சுற்றி இருக்கும் வெளிப் பிரகார சிற்பங்களை காணலாம் என்று முன்னேறுகையில் அந்த காட்சி எங்களை மிரளச் செய்தது!! நாம் இந்திர லோகத்திற்கு வந்திருக்கிறோமா? அல்லது தமிழகத்தில் தான் இருக்கிறோமா? என்று யோசிக்க வைத்தது. விமானம் முழுவதுமே 4 சக்கர தேர் வடிவில்!! அந்த விமானத்தை குதிரைகள் இழுத்துக்கொண்டு ஓடிவதை போன்ற அமைப்பு!! பக்தி இலக்கியங்களில் கூறப்படும் 9 வகையான சிவன் கோயில் அமைப்பில் இது "கரக்கோயில்" அமைப்பை சார்ந்தது. அதாவது விமானம் முழுவதும் தேர் வடிவில். அருகில் இருந்த நண்பரின் முகத்தைப் பார்க்கையில், வாயில் வார்த்தை இல்லாமல் வாயடைத்துப் போய் சுயநினைவற்றவராய் இருந்தார். மீள்வதற்கு சற்று நேரமாயிற்று.

விமானம் முழுக்க இராமாயணம்,சிவனின் திருவிளையாடல்கள், நாயன்மார்களின் கதைகள்,கிருஷ்ணனின் லீலைகள், என அசத்தலான சிற்பங்கள், எதை ரசிப்பது அங்கே? நான்கு அடி உயரமிருக்கும் சந்திரரை ரசிப்பதா? சூரியரை ரசிப்பதா? அல்லது கங்காதரரையா? வித்யாசமான கட்டிட அமைப்பிற்குள் ரிஷபத்தின் மீது அமர்ந்திருப்பதை போன்ற தக்க்ஷணாமூர்த்தியையா? அல்லது நான்கே இன்ச் அளவில் வலது காலை தரையில் ஊன்றி இடது காலை மடித்து அபய முத்திரையுடன் நடனமாடிக்கொண்டிருக்கும் நடராஜரை ரசிப்பதா? வித விதமான யாளி மிருகங்களையா? கட்டை விரல் உயரமே உள்ள சிங்கங்களையா? இது என்ன சோதனை கடவுளே!! எறும்புக்கு சக்கரை பிடிக்கும் தான், அதற்காக மூச்சு தினறம் வகையில் அதன் தலை மீதா கொண்டு போய் கொட்ட முடியும்? அது ஆபத்தில் அல்லவா முடியும்? எங்களுக்கு அப்படி தான் இருந்தது அங்கு. இதை எல்லாம் மனிதர்கள் தான் செய்திருப்பார்களா? அப்படி செய்திருந்தால் அவர்கள் எப்படிப்பட்ட கலா ரசிகர்களாக இருந்திருப்பார்கள்! தானும் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை சாளுக்கிய- சோழ வம்சத்தில் வந்த முதலாம் குலோதூங்கன் தன் பங்கிற்கு இது போன்ற ஒரு அழகான கோயிலை எழுப்பி நிரூபித்து விட்டாரே!

சுற்றி வந்து கொண்டே இருக்கையில், இடைவிடாது அந்த ஜதி சப்தம் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது! தை..தை.. தித்தித்தை..தை..தை.. தித்தித்தை..எங்கிருந்து வருகின்றது இந்த இனிமையான சப்தம் என்று சற்று மேலே நிமிர்ந்து பார்த்தால் விமானத்தில் ஆடல் மங்கையரின் சிற்பங்கள்!! ஒவ்வொரு மங்கையருக்கு அருகிலும் இசை வாத்தியம் வாசிக்கும் இருவர், அவர்கள் வாசிக்கும் இசைகேற்றார் போல் நடனம் அரங்கேறுகின்றது!!அந்த மங்கையரின் உடை அலங்காரமென்ன!! ஒயிலென்ன!! நளினமென்ன!! நடன அசைவுகலென்ன!! சற்று உயரத்தில் இருக்கவே அவை சிலைகள் தானா அல்லது உண்மையான மங்கையரா என்று தொட்டு பார்த்து சோதிக்க முடியவில்லை.

மனிதர்கள் இந்த கோயிலுக்கு வந்தால் வெளியே செல்லவே கூடாது என்று மனதில் வைத்து கட்டியதை போன்ற கொள்ளை அழகு! பங்குனி மாதம் 3,4,5 ஆம் தேதிகளில் காலை உதயத்தின் போது சூரியன் பதினைத்து நிமிடங்கள் சிவனை வழிபடுகிறார்!. வாதாபியில் இருந்து வெற்றிப் பரிசாக பல்லவர்கள் கொண்டு வந்த கணபதி சிலையை போன்று, ராஜேந்திர சோழன் கங்கை வரை சென்று போர் செய்து வெற்றி பெற்று அந்த போர் வெற்றியின் நினைவாக வங்க தேசத்தில் இருந்து கொண்டு வந்த அற்புதமான "தச புஜ ரிஷப தாண்டவமூர்த்தி" இந்த கோயிலில் காணக்கிடைகிறார், பத்து கைகளிலும் ஆயுதங்களுடன், தேவர்களும் ரிஷிகளும் பாதத்தின் கீழ் சூழ, ரிஷபத்தின் மீது ஆடிக்கொண்டிருக்கும் அற்புதமான சிலை, பிரதோஷத்தின் போது மட்டுமே பூஜைக்காக பொது மக்கள் பார்வைக்கு அவர் காட்சி தருகிறார்.

கருவறைக்கு சென்று தேவாரம் போற்றிய இறைவனை வணங்கிவிட்டு, ராஜ ராஜனின் அண்ணன் "ஆதித்த கரிகாலனை" கொன்ற துரோகிகளான "ரவிதாசன்,பரமேஸ்வரன்,சோமன்" கூட்டாளிகள் காட்டுமன்னார் கோயில் கருவறையின் பின் புறம் ஒளிந்திருப்பதாய் தகவல் கிடைக்க, அந்த கயவர்களை இருட்டுவதற்குள் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தினால் வேறு வழி இன்றி அரை மனதுடன் அந்த கோயிலை விட்டு வெளியேறினோம். நீங்கள் தமிழகத்தில் பிறந்திருந்து இந்த கோயிலுக்கு இது நாள் வரை செல்லாதவராக இருப்பின், அதை விட பேரிழப்பு வேறேதும் உங்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 34 வது தேவாரத்தலம் ஆகும்.